‘வடக்குப்பட்டி ராமசாமி’.- திரைப்பட விமர்சனம்!
சென்னை:
சந்தானம், மேகா ஆகாஷ், மாறன், சேசு, தமிழ்,எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா மற்றும் பலர் நடிப்பில் ஷான் ரோல்டன் இசையில் கார்த்திக் யோகி இயக்கத்தில் வெளிவந்து இருக்கும் படம் தான் “வடக்குப்பட்டி ராமசாமி”
தற்போது இப்படம் வெளி வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிடுக்கும் சூழ்நிலையில்…இதன் கதையைப் பொறுத்தவரையில்,
வடக்குப்பட்டி கிராமத்தில் பானை செய்யும் தொழிலாளர் குடும்பத்தை சேர்ந்தவரான சந்தானம், கடவுள் மீது நம்பிக்கை இல்லாமல் இருக்கிறார். சிறு வயதிலேயே பள்ளிக்கூடம் செல்லாமல் பானை செய்து பிழைப்பு நடத்தும் சந்தானத்திற்கு வடக்குப்பட்டி கிராமத்தில் ஒரு திருடன் நகைகளை திருடி கொண்டு வரும்போது அவனை அங்குள்ள மக்கள் விரட்டுகிறார்கள். அந்த சமயத்தில் சந்தானம் வீட்டுக்கு அருகில் இருந்த பானை ஒன்றை எடுத்து அதில் எல்லா நகைகளைப் போட்டு ஒரு இடத்தில் அந்த பானையை புதைத்து, அதன் மேல் ஒரு கல்லை வைத்து விடுகிறான் அந்த திருடன்.. அந்த கிராமத்தில் தீய சக்தியாக நடமாடிக் கொண்டிருக்கும் காட்டேரி ஒன்று அந்த கிராமத்து மக்களை மிரட்டி மாலை நேர வேளையில் யாரையும் வெளியில் வராமல் தடுக்கிறது. இந்நிலையில் அந்த காட்டேரி மக்களை மிரட்டும் போது அந்த கிராமத்தில் உள்ள அனைவரும் ஒன்று சேர்ந்து தீ பந்தம் எடுத்துக்கொண்டு அந்த காட்டேரியை துரத்துகின்றனர்
அப்போது ஒரு மாட்டு வண்டி ஒன்றில் தப்பி செல்ல முயன்ற காட்டேரி அந்த வண்டி, நகைகள் புதைக்கப்பட்ட கல்லின் மீது ஏறி தீப்பிடித்து எரிகிறது. அந்த தீயில் காட்டேரி எரிந்து தண்ணீருக்குள் விழுந்து காணாமல் போகிறது. திருடனால் புதைக்கப்பட்ட அந்த பானை வெளியே தெரியவர, அதனுள் நகையில் இருப்பதை கண்ட கிராம மக்கள் அந்த பானையை தெய்வமாக கருதி தங்களை காக்க வந்த அம்மன் என்று எண்ணி அனைவரும் வணங்கி வழிபடுகின்றனர். அந்த கிராமத்து மக்களின் பக்தியைக் கண்டு சந்தானம் தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் ஒரு கோயில் கட்டி அந்த பானையை அம்மன் மாதிரி வடிவமைத்து வசூலில் இறங்குகிறார். அந்தக் கோயில் மூலம் தினமும் அதிகமான பணத்தை சம்பாதித்த சந்தானம் மேலும் அதிகமான பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தன் நண்பர்களுடன் இணைந்து திட்டம் தீட்டுகிறார்.
அந்தத் திட்டத்தை நிறைவேற்ற அங்குள்ள தாசில்தாரிடம் சென்று கோயிலைப் பற்றி சொல்லி அதிகமான பணம் சம்பாதிப்பதற்கு வழிகள் சொல்கிறார். தாசில்தாரும் சந்தானத்திடம் தனக்கு சேர வேண்டிய பங்குகள் பற்றி பேசுகிறார். இதனால் இருவருக்கும் சச்சரவு ஏற்பட்டு தாசில்தாரிடம் சண்டையிட்டு வெளியேறுகிறார் சந்தானம். சந்தானத்தின் பேராசையால் தாசில்தார் அந்த கோயில் முன் கலவரம் ஏற்பட்டதாக சொல்லி கலெக்டர் மூலம் அந்த கோயிலை மூடி சீல் வைக்கிறார். இதனால் சந்தனத்தின் பண வசூல் பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் அரசாங்கம் சீல் வைத்த பிறகு இந்த கோயிலை எப்படியாவது திறக்க வேண்டும் என்று சந்தானம் அந்த ஊரில் உள்ள இரண்டு பெரிய மனிதர்களிடம் சென்று சமாதானம் பேசுகிறார். அந்த கோயிலை திறக்க எண்ணிய ஊர் பெரிய மனிதர்கள் இருவரும் கலெக்டரிடம் சென்று உரையாடுகிறார்கள். கோயில் திறந்த பிறகு எந்தவித கலவரம் நடக்க கூடாது என்று வாக்குறுதி வாங்கிய பிறகு கோவிலை திறக்க கலெக்டர் உத்தரவிடுகிறார். அந்த கோயிலை திறந்த பிறகு சந்தானம் நினைத்த மாதிரி பெரிய அளவில் பணம் சம்பாதித்தாரா? இல்லையா? என்பதுதான் “வடக்குப்பட்டி ராமசாமி” படத்தின் மீதி கதை.
கதாநாயகனாக சந்தானம் நடித்திருந்தாலும், அந்த கதாபாத்திரமாகவே மாறி நடித்து, மக்களை மகிழ்விப்பதுதான் தன்னுடைய முதல் நோக்கம் என்பதை மீண்டும் இப்படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து அடிக்கும் லூட்டி, அலப்பறை ரசிகர்கள் அனைவரையும் கைத்தட்டி சிரிக்க வைக்கிறது. தன்னிடம் காமெடியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள் என்பதால் அதற்கேற்ற கதாபாத்திரத்தை ஏற்று மக்களைச் சிரிக்க வைப்பதொன்றே நோக்கம் எனச் செயல்பட்டிருக்கிறார் சந்தானம்.
கதாநாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ், கதாநாயகிக்கு அதிக முக்கியத்துவம் இல்லாவிட்டாலும் அந்த கதாபாத்திரமாக நினைத்து உள்வாங்கி நடித்திருக்கிறார்.
மாறன் மற்றும் சேசுவின் நகைச்சுவைக் காட்சிகள் திரையரங்கையே அதிர வைக்கிறது. அதிலும், சேசுவின் பரதநாட்டியம் சிரிக்க தெரியாதவர்களை கூட குபீர் என்று சிரித்து விடுவார்கள். தாசில்தார் வேடத்தில் நடித்திருக்கும் தமிழ், தனது வில்லத்தனத்தை இப்படத்தில் காட்டாமல் மிக சிறப்பாக அந்த கேரக்டருக்கு உயிர் கொடுத்து இருக்கிறார்.
எம்.எஸ்.பாஸ்கர், ஜான் விஜய், ரவி மரியா, நிழல்கள் ரவி, நான் கடவுள் ராஜேந்திரன், கூல் சுரேஷ், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின், கல்கி என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் போட்டி போட்டு ரசிகர்களை சிரிக்க வைக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் தீபக், படம் கலர்ஃபுல்லாக இருக்கவேண்டும் என்பதற்காக கடுமையாக உழைத்துள்ளார்.
ஷான்ரோல்டன் இசையில் பாடல்கள் கேட்கலாம், பின்னணி இசையைக் கொஞ்சம் கூடுதலாகவே கொடுத்திருக்கிறார்.
இப்படத்திற்க்கு கதை, எழுதி இயக்கியிருக்கும் கார்த்திக்யோகி, எதைச் செய்தாவது காமெடி மூலம் அனைவரையும் சிரிக்க வைக்கவேண்டும் என்று மட்டுமே யோசித்து செயல்பட்டிருக்கிறார். இப்படத்தின் முதல் காட்சியிலிருந்து இறுதிக்காட்சி வரை தங்களை மறந்து சிரிக்கும்படி அனைத்து விசயங்களையும் முழுக்க முழுக்க நகைச்சுவையாக இந்தத் திரைப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் யோகி. அவரை கண்டிப்பாக பாராட்டியே தீர வேண்டும்.
மொத்தத்தில், ‘வடக்குப்பட்டி ராமசாமி’ அனைவரையும் சிரித்து மகிழ வைக்கும் உன்னதமான காமெடி படம்.
ரேட்டிங் 3/5.