“சிக்லெட்ஸ்”- திரைப்பட விமர்சனம்!
சென்னை:
இயக்குனர் முத்து இயக்கத்தில் சாத்விக் வர்மா, நயன் கரிஷ்மா, சுரேகா வாணி, ஸ்ரீமான், மனோபாலா, ஜாக் ராபின்சன், அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா, ஆறந்தை ராஜகோபால், மற்றும் பலர் நடித்திருக்கும் படம்தான் “சிக்லெட்ஸ்”
இப்படத்தின் கதையைப் பொறுத்தவரையில்,
தற்போது பள்ளியில் படிப்பை முடிக்கும் பெண்களும், ஆண்களும் தங்களது வயதுக்கோளாறு காரணமாக பெற்றோர்களுக்குத் தெரியாமல் காதல் செய்வது, ஆண்களுடன் இரட்டை அர்த்த வசனங்களை பேசி அரட்டையடிப்பது, டேட்டிங் போன்ற வில்லங்கமான விவகாரங்களில் மிகுந்த ஆர்வத்தோடு ஈடுபடுவது சகஜமாகி விட்டது. இந்நிலையில் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா இவர்கள் மூவரும் சிறு வயதிலிருந்தே இணைபிரியாத தோழிகளாக இருக்கிறார்கள். இந்த மூன்று தோழிகள் பள்ளிப்படிப்பை முடித்து அடுத்த கட்டத்துக்கு செல்ல தயாராகின்றனர் அவர்களின் பருவ கோளாறு காரணமாக தங்களுக்கு பிடித்தமான பாய் பிரண்டுகளை தேடுகின்றனர். அதன்படி, மூன்று பேரும் தங்களது மனதுக்கு பிடித்தவர்களை தேர்வு செய்து அவர்களுடன் ஊர் சுற்றி உல்லாசமாக இருப்பதற்காக பெற்றோர்களிடம் தோழியின் தங்கை திருமணத்துக்கு செல்வதாக பொய் சொல்லிவிட்டு செல்கிறார்கள்.
ஒவ்வொருவரும் ரிசார்ட், நட்சத்திர ஓட்டலில் தங்கி செக்ஸ் விஷயத்தை தெரிந்துக் கொள்வதற்காக தங்களது பாய் பிரண்ட்டுகளுடன் காரில் புறப்பட்டு செல்கின்றனர். தாங்கள் பெற்ற பிள்ளைகள் மீது அதிகமான நம்பிக்கை வைத்திருக்கும் பெற்றோர்களுக்கு அவர்கள் பாய் பிரண்ட்டுகளுடன் தப்பான வழிக்கு சென்று இருக்கிறார்கள் என உண்மை தெரிய வருகிறது. தங்களது பிள்ளைகள் பொய் சொல்லி விட்டு சென்றதை நினைத்து மன வேதனைபடும் மூன்று பெற்றோர்களும் எப்படியாவது தங்கள் மகள்களை கற்புடன் காப்பாற்ற வேண்டும் என்று அவர்களை பின்தொடர்ந்து செல்கின்றனர். ஆனால் அவர்கள் பெற்றோரிடம் சிக்காமல் தப்பி வேறு, வேறு இடத்திற்கு செல்கிறார்கள். தங்கள் மகள்களை பெற்றோர்கள் கண்டுபிடித்து காப்பாற்றினார்களா? இல்லையா? என்பதுதான் “சிக்லெட்ஸ்” படத்தின் மீதிக் கதை.
மூன்று புதுமுக கதாநாயகிகள் இப்படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் இளமை ததும்ப தாராளமாகவே கவர்ச்சி காட்டி நடித்திருக்கும் நயன் கரிஷ்மா, அம்ரிதா ஹால்டர், மஞ்சீரா ஆகியோர் தங்களது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து மிக சிறப்பாக நடித்திருக்கிறார்கள். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என இந்தக் காலகட்டத்திற்கு ஏற்றவாறு உயர்தர வர்க்கம் இப்படித்தான் இருக்கும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடித்திருக்கிறார்கள்.
இந்த பெண்களின் பாய் ஃபிரண்ட் கதாபாத்திரங்களில் வருணாக சாத்விக் வர்மா, சிக்குவாக ஜாக் ராபின்சன், ஆரோனாக ஓர் இளைஞர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். செக்ஸ் ஆர்வம் அதிகமாக உள்ள இளைஞர் கதாபாத்திரங்களை இவர்கள் மூவரும் மிக சிறப்பாக நிறைவாகவே செய்திருக்கிறார்கள். ஆர்வக்கோளாறில் வழி மாறி காமக் கொடூரத்திற்கு ஆளாகி இளம் பெண்களை எப்படி அனுபவிக்கலாம் என்ற எண்ணத்தில் பயணிக்கும் இவர்களது நடிப்பு அருமை.
அந்த பெண்களின் பெற்றோர் கதாபாத்திரங்களில் கீர்த்தியாக சுரேகா வாணி, சந்தோஷாக ஸ்ரீமான், அய்யராக ராஜகோபால் ஆகியோர் மிக அருமையாக நடித்திருக்கிறார்கள். இவர்களோடு சேர்ந்து பாட்டி வேடத்தில் வரும் பெண்மணி, மெடிக்கல் ஷாப் உரிமையாளராக வரும் மனோபாலா உள்ளிட்டோரும் தங்கள் அனுபவ நடிப்பால் அனைவரையும் கவர்கிறார்கள்.
மூன்று பெண்களின் ஒவ்வொரு அங்கங்களையும் சிறப்பாக காட்டி இளைஞர்களைக் குஷிப்படுத்தவேண்டும் என்கிற ஒற்றை இலக்குடன் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் கொளஞ்சி குமார்.
பாலமுரளிபாலுவின் இசையில் உருவாகியிருக்கும் பாடல்கள் பரவாயில்லை. கதைக்களத்திற்கு ஏற்றவாறு பின்னணி இசை இயல்பாக அமைந்திருக்கிறது.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குநர் முத்து. பெற்றோர்கள் தங்களது மகள்கள் விஷயத்தில் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கதையை எடுத்து இருந்தாலும், கவர்ச்சி மற்றும் இரட்டை அர்த்த வசனங்களை அதிகமாக புகுத்தி முகம் சுழிக்கும் விதத்தில் சொல்லியிருப்பது படத்திற்கு பெரும் பலவீனம் என்றுதான் சொல்ல வேண்டும். கத்தி மேல் நடப்பது போன்ற கதையைக் கையிலெடுத்திருக்கும் இயக்குநர் அதை இன்னும் கவனமாகக் கையாண்டிருக்கவேண்டும்.
மொத்தத்தில் இளைஞர்கள் தங்களது கேர்ள்ஃபிரண்ட்ஸ்களுடன் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் “சிக்லெட்ஸ்”.
ரேட்டிங் 2.5/5.
RADHAPANDIAN.