ஜெ.பேபி – திரைவிமர்சனம்
காணாமல் போன தன் தாய் ஊர்வசியைத் தேடி ‘அட்டக்கத்தி’ திணேஷூம், எந்த பேச்சுவார்த்தையும் இல்லாமல் விரோத மனப்பான்மையுடன் இருக்கும் அவருடைய உடன் பிறந்த அண்ணன் மாறனும் கொல்கத்தா செல்கிறார்கள். ஆனால் அங்கு சென்ற அவர்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருக்கிறது. அங்கும் தன் தாயை காணவில்லை என்று தெரிய வருகிறது.
தன் தாய் ஊர்வசியை கண்டுபிடித்தார்களா.. எதிரும் புதிருமாய் இருந்த அண்ணன், தம்பி பகையை மறந்து ஒன்று சேர்ந்தார்களா.. என்பது தான் கதை.
வழக்கமாக பா.ரஞ்சித் படங்களில் சாதிய பாசம் மேலோங்கி நிற்கும்.. ஆனால் இந்த படத்தில் எங்குமே சாதிய குறியிடோ அல்லது வசனமோ எதுவுமே இல்லாமல், அம்மா மகன்களின் பாசம், அண்ணன், தம்பி பாசம் மற்றும் குடும்ப உறவுகளுக்குள் நிகழும் யதார்த்தமான பிரச்சனைகள், என அனைத்து தரப்பு (சாதி) மக்களுக்கான படமாக இந்த ஜே.பேபி படத்தை தயாரித்து இருக்கிறார் பா.ரஞ்சித்.
செஞ்சி அருகே இருந்த பேபி என்பவரின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்தை ஒரு திரைப் படமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுரேஷ் மாரி. எங்கும் சினிமாத்தனம் இல்லாத ஒரு யதார்த்த வாழ்வியலை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.
அம்மாவை தேடி கண்டுபிடிக்கும் மகன்களுக்கு உதவும் மூர்த்தி என்பவரின் கேரக்டர் அற்புதமானது.. இவரை போல மனிதர்கள் நம் வாழ்க்கையில் கிடைப்பது அரிதான ஒன்று.. இவர் தான் நிஜ வாழ்க்கையில் தொலைந்து போன அந்த அம்மாவை, தேடி கொல்கத்தாவிற்கு வரும் மகன்களுக்கு உதவி செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பேபி கேரக்டருக்கு ஊர்வசி தவிர யாரையும் நினைத்துப் பார்க்க முடியாது என்கிற அளவிற்கு அழகான சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார். இந்திராகாந்தி, ஜெயலலிதா என் தோழி, ஸ்டாலின் என் நண்பர் என அனைவரையும் கலாய்ப்பது என ஊர்வசி பின்னி பெடல் எடுத்து விட்டார். வயதான பாட்டியாக வாழ்ந்து இருக்கிறார்.
பிள்ளைகளின் குடும்ப பிரச்சனை.. நான் இருக்கும் வரை நீங்கள் பிரிந்து விடக்கூடாது ஒன்றாக வாழ வேண்டும் என சொல்லும் போது ஒவ்வொரு அம்மாவை நினைவு படுத்துகிறார்.. ஊர்வசிக்கு விருது நிச்சயம்.
எத்தனையோ படங்களில் காமெடியனாக பார்த்து வந்த மாறனை இந்தப் படத்தில் வித்தியாசமாக காட்டி இருக்கிறார் இயக்குனர்.. அந்த கேரக்டருக்கு ஏற்ப செந்தில் ஆகவே வாழ்ந்திருக்கிறார். குடித்து விட்டு அவர் செய்யும் அலப்பறைகள் சீரியஸ் படத்திற்கு கொஞ்சம் சிரிப்பை வழங்கி இருக்கிறது.
ஷேர் ஆட்டோ ஓட்டும் டிரைவராக தினேஷ். ஒரு ஏழை குடும்பத்து மனிதனை நம் கண் முன் நிறுத்தி இருக்கிறார்.. அண்ணன் தன்னுடன் பேசாதது குறித்து கவலைப்படும் போதும் அம்மா பாசத்திற்காக ஏங்கும் போதும், அம்மாவை மனநல மருத்துவமனையில் சேர்த்து விட்டு மருத்துவமனை வாசலிலேயே தங்கி கொள்வதும், மனநலம் பாதிக்கப்பட்ட அம்மாவால் ஊரில் உள்ளவர்களின் கோபத்துக்கு ஆளாவதும், அதனால் அம்மாவை கண்டிப்பதும், பிறகு அதையே நினைத்து வருந்துவதும் என நல்லதொரு நடிப்பை கொடுத்திருக்கிறார். கூடவே அண்ணன் வைத்திருந்த சரக்கை காலி பண்ணிவிட்டு அந்த பாட்டிலில் தண்ணீரை கலந்து வைத்துவிடுவது என அவர் பங்குக்கு ‘செம’ காமெடி செய்திருக்கிறார்.
நிச்சயம் இந்த படம் மகளிர் தினத்தில் அம்மாக்களுக்கு சமர்ப்பணமாக விருந்து படைத்திருக்கின்றனர் பா.ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன் நிறுவனத்தினர்.