செம்பியன் மாதேவி – விமர்சனம்
லோக பத்மநாபன் எழுதி இயக்கி இசையமைத்து நாயகனாக நடித்திருக்கும் படம் ‘செம்பியன் மாதேவி’.
கதை…
செம்பியன் என்ற கிராமத்தில் 2014 ஆம் ஆண்டில் நடக்கும் கதை.. நாயகன் வீரா நாயகி மாதேவி..
தன் வீட்டு கோழி பண்ணையில் வேலை பார்க்கும் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நபரின் மகளைக் காதலிக்கிறார் நாயகன் வீரா.. நாயகன் உயர்சாதி என்பதால் முதலில் காதலை ஏற்க மறுக்கிறார் நாயகி.. ஆனால் அவரின் நல்ல உள்ளம் புரிந்து கொள்ள மெல்ல மெல்ல இவரும் காதலிக்கிறார்.
ஒரு கட்டத்தில் இருவரும் நெருக்கமாக இருப்பதால் நாயகி கர்ப்பமாகிறாள். கர்ப்பமடைந்த நாயகி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு நாயகனிடம் கேட்க, அவர் என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறுவதோடு, தனது சமூகத்தைச் சேர்ந்த நண்பர்களிடம் உதவி கேட்கிறார். ஆனால், நண்பனின் பிரச்சனையாக பார்ப்பதை விட்டுவிட்டு தங்கள் சமூகத்திற்கு ஏற்பட்ட இழுக்காக நினைக்கும் சாதி வெறிப்பிடித்தவர்கள், நண்பனின் காதலியை கொலை செய்ய திட்டம் போட, அவர்களிடம் இருந்து நாயகி தப்பித்தாரா?, அவரது காதல் வெற்றி பெற்றதா? அதன் பிறகு என்ன நடந்தது.? என்பதெல்லாம் மீதிக்கதை.
படத்தை இயக்கி, தயாரித்து, இசையமைத்திருப்பதோடு கதையின் நாயகனாகவும் நடித்திருக்கும் லோக பத்மநாபன், எந்த இடத்தில் நாயகனுக்கான தனித்துவத்தை காட்டாமல் கதையின் நாயகனாக பயணித்து கதாபாத்திரத்திற்கு பலம் சேர்த்திருக்கிறார். உயர் சாதி என்று சொல்லிக் கொள்ளும் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், சக மனிதர்களிடம் எந்தவித சாதி பாகுபாடும் காட்டாமல் சமமாக பழகுவது, சாதி வெறியர்களால் தனது காதலிக்கு நேர்ந்த கொடுமையை கண்டு கொந்தளிப்பது என உணர்வுப்பூர்வமாக நடித்து கைதட்டல் பெறுகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் அம்ச ரேகா கதாபாத்திரத்திற்கு ஏற்ற முகம், கொடுக்கப்பட்ட வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார். குறிப்பாக இறுதிக் காட்சியில் தன் காதலனை திருமணம் செய்துக் கொண்டு வாழ வேண்டும், என்ற எண்ணத்தை அவர் வெளிப்படுத்தும் இடம் வலி மிகுந்ததாக இருக்கிறது.
மற்றொரு நாயகியாக கண்ணகியாக நடித்திருக்கும் ரெஜினா.. ரசிக்கத்தக்க நடிப்பை கொடுத்து கவர்கிறார்.. கவர்ச்சியாகவும் இருக்கிறார்.
பல படங்களில் வில்லனாக மிரட்டிய மணிமாறன் இந்த படத்தில் ஜாதி வெறிப்பிடித்தவராக வருகிறார்.. அவரும் மிரட்டலான நடிப்பை கொடுத்திருக்கிறார்.
அதுபோல முருகேசன் கேரக்டர் மற்றும் மாடு முட்டி கேரக்டர் ஆகியவை கவனம் பெறுகின்றன.. முக்கியமாக இவர்கள் படத்தின் கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கின்றனர். மற்றபடி படத்தில் நடித்துள்ளவர்கள் கிராமத்து மனிதர்களாகவே தங்களது கேரக்டர்களில் பளிச்சிடுகின்றனர்..
தற்போதைய தமிழ் சினிமாவின் போக்கு மோசமாக சென்று கொண்டிருக்கிறது… இப்படியே ஒவ்வொருவரும், ஒவ்வொரு ஜாதியையும் தூக்கி பிடித்துக் கொண்டு திரிந்தால்.. எதிர்காலத்தில் எப்படி போகும் என்று தெரியவில்லை..?