திரைப்படத்திற்கு நடுவே வரும் “இடைவேளை” என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும்.
'கோழிப்பண்ணை செல்லத்துரை' இசை வெளியீட்டு விழாவில் சீனு ராமசாமி பரபரப்பு பேச்சு
விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இப் படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.
தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. படத்தின் இசையை விஜய் சேதுபதி வெளியிட, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மற்றும் படக்குழுவினர் இணைந்து பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்வில் இயக்குநர் சீனு ராமசாமி பேசுகையில்,
”சினிமாவின் வளர்ச்சிக்கு மிக முக்கியமான தேவை என்ன என்பது குறித்து நான் எப்போதும் சிந்தித்துக் கொண்டே இருப்பேன். ஒரு திரைப்படம் தயாராகிறது, திரையரங்கத்தில் திரையிடப்படுகிறது, வசூல் செய்கிறது. அதன் பிறகு அந்த திரைப்படத்தை மக்கள் மறந்து விடுகிறார்கள். அப்படி என்றால் இது வணிகம் மட்டும் தானா..! இது சந்தை மதிப்புள்ள பொருள் மட்டும் தானா..! இந்தக் கேள்வி.. எனக்குள் நீண்ட நாட்களாக இருக்கிறது. இதற்கு மாற்றாக என்ன செய்யலாம், என்ன மாதிரியான விஷயங்களை முன்னிலைப்படுத்தலாம் என நான் சிந்திக்கும்போது எனக்கு இருப்பது நிலம், அது என் நிலம், என் ஊர், என் மண், நான் வாழ்ந்த வாழ்க்கை. நான் வாழ விரும்பும் ஒரு வாழ்க்கை. கதை என்றால் அது என் நிலம் தான். என் மண்ணுடன் தொடர்புடையது.
சினிமா உண்மையிலேயே ஒரு மாற்றத்தை சந்திக்க வேண்டும் என்றால் இடைவேளை என்ற ஒரு விஷயத்தை நீக்கிவிட வேண்டும். இது மிக முக்கியமான கருத்து. உடனடியாக திரையரங்குகளில் பாப்கார்ன் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்பவர்கள் என் மீது கோபம் கொள்ளக்கூடாது. ஏனெனில் பாப்கார்ன் சாப்பிடுபவர்கள் எப்போது வேண்டுமானாலும் அதனை சாப்பிடுவார்கள்.
அந்தக் காலத்தில் நாடகத் துறையில் இருந்து சினிமா வந்தது. சம்பூர்ண ராமாயணம் – மூன்றரை மணி நேரம் திரைப்படமாக வந்தது. அதனை ஒரே தருணத்தில் தொடர்ச்சியாக திரையிட முடியாது என்பதற்காக இரண்டு முறை இடைவேளைகள் அளிக்கப்பட்டன. இது நாளடைவில் ஒரு இடைவேளையாக மாற்றம் பெற்றிருக்கிறது.
இணையத் தொடர்கள் அறிமுகமாகி இருக்கிறது. ஆனால் அதற்கு தமிழில் பெரிய அளவில் வரவேற்பு இல்லை. ஆனால் மேற்கத்திய நாடுகளில் இணைய தொடர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கிறது. ஏனெனில் அவர்கள் முழு நீள திரைப்படத்தை பார்த்து பழக்கப்பட்டவர்கள். அவர்கள் பாகம் பாகமாக படைப்பை பார்ப்பதை விரும்புகிறார்கள். ஆனால் நாம் இரண்டு பாகமாகத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம். முதல் பாதி – இரண்டாம் பாதி என இரண்டு பாகமாகத்தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அதனால் தான் கூடுதலாக மூன்று அல்லது நான்கு பாகங்கள் இணைத்தால் நமக்கு பிடிப்பதில்லை.
சினிமா என்பது முழு உடல். அதனை அரை மணி நேரம் பார்த்துவிட்டு அப்படியே நிறுத்திவிட்டு, இதற்கு முன் எப்படி இருக்கும் எனக் கேட்பது தவறு. முழு உடல், முழு தரிசனம். அப்படி ஒரு முழு தரிசனம் இந்த ‘கோழிப்பண்ணை செல்லதுரை’யில் கிடைக்கும்.
நான் இயக்குநராக இருந்தாலும் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தை. ஆனாலும் நான் இதுவரை தயாரிப்பாளர் அருளானந்து போன்றதொரு தந்தையை சந்தித்ததில்லை. அவரை ஒப்பிட்டுப் பேசுவதற்கு உதாரணத்திற்கு கூட காவியத்தில் எனக்குத் தெரிந்த அளவில் யாரும் இல்லை. நான் இதை மிகையாக கூறவில்லை. காவியத்தில் கூட இவ்வளவு பாசத்துடன் ஒரு தந்தை இருப்பாரா..! என்பது சந்தேகம்தான். மிகவும் அன்புடனும், தெளிவான திட்டமிடலுடனும் ஒரு செயலை முன் நகர்த்திச் செல்லும் ஒரு தந்தையை நான் இதுவரை சந்திக்கவே இல்லை. இந்த படத்திற்காக முதலில் என்னை அழைத்தது அவர் தான். இயக்குநர் ஒருவர் மூலமாக அவர் என்னை அழைத்தார். முதலில் தொலைபேசி மூலமாகவே பேச தொடங்கினோம். அப்போது அவர் என் மகனை நாயகனாக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். அப்போது அவரிடம் நீங்கள் தயாரிக்கிறீர்கள் என்பதற்காக நான் ஒரு படத்தினை இயக்க முடியாது. என் கதைக்கு அவர் பொருத்தமானவரா, தகுதியானவரா என்ற என பரிசோதனை செய்த பிறகு ,அவர் சரியானவர் தான், பொருத்தமானவர் தான் என உறுதிப்படுத்திக் கொண்டு தான் படத்தை இயக்க ஒப்புக் கொள்வேன் என்றேன். ஏனெனில் என்னிடம் இருக்கும் ஒரே அஸ்திரம் அது ஒன்றுதான். என்னுடைய கதாபாத்திரத்திற்கான நடிகர் தேர்வு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்வதில்லை.
“கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தை தந்தை தயாரிப்பாளர் என்பதற்காக இந்த படத்தை உருவாக்கவில்லை. ஏகன் ஏற்கனவே சின்னத்திரையில் அறிமுகமானவர். அத்துடன் நடனம், உடற்பயிற்சி, நடிப்பு என அனைத்து தகுதிகளையும் பெற்றிருந்தார். அவரின் திறமையை உணர்த்தும் பல காணொலிகளை எனக்கு அனுப்பி கொண்டிருந்தார். அதன் பிறகு தான் அவர் ஒரு சினிமா வெறியன், சினிமா காதலன், சினிமாவிற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ஒரு மாணவன் என்பதை அறிந்து கொண்டேன். நான் அவரை ஆடிஷனுக்காக வரவழைத்தேன். ஆனால் ஏகனை நான் ஆடிஷன் செய்யவில்லை. அவரை வரும்போது கவனித்தேன். உட்காரும்போதும் கவனித்தேன். பேசும் போதும் அவனுடைய கண்களை கவனித்தேன். அவ்வளவுதான். அவனை அனுப்பி வைத்து விட்டேன். இந்த இளைஞன் எதிர்காலத்தில் மிகச் சிறந்த நடிகனாக வருவான் என்று எனக்கு அப்போதே தெரிந்து விட்டது. சரியான வாய்ப்பிற்காக காத்திருக்கிறார் என்பதையும் நான் புரிந்து கொண்டேன்.
சிறந்த நடிப்பு என்றால் என்ன? நான் நடிப்பை சொல்லி கொடுக்கும் ஆசிரியர் அல்ல. நடிப்பை வாங்கும் ஆசிரியர். இசைஞானி இளையராஜா மிகச்சிறந்த இசைக் கலைஞர்களை தேர்வு செய்கிறார். அவர்களிடமிருந்து சிறந்த முறையில் ராகங்களை வாசிக்க செய்து அதனைப் பெற்றுக் கொள்கிறார். அதைப்போல் ஏகன் என்னிடம் வரும்போது ஒரு நடிகருக்கான முழு தகுதியுடன் வருகை தந்த ஒரு இளைஞன்.
என்னுடைய பங்களிப்பு என்னவென்றால், படப்பிடிப்பு தளத்தை பதற வைக்க மாட்டேன். எப்போதும் இயல்பாகவும், அமைதியாகவும் வைத்திருப்பதில் கவனம் செலுத்துவேன். எனக்குள் பதற்றம் இருந்தாலும் அதனை நடிகர்களிடம் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டேன். படப்பிடிப்பு முழுவதும் ஏகனை ஒருபோதும் ஏசியதில்லை. அவரை மட்டுமல்ல, படப்பிடிப்பு தளத்தில் யாரையும் நான் திட்டியதில்லை.
நீங்கள் கயிறுகளை ஆட்டிக் கொண்டிருந்தால் பறவைகள் ஒருபோதும் அமராது. அனைவரும் படப்பிடிப்பு தளத்தில் அமைதியாக இருக்கும் போது அவர்களின் இயல்புணர்ச்சி வெளிப்படும். அந்த இயல்புணர்ச்சியை தூண்ட வேண்டும். என்னுடைய வேலையே நடிகர்களிடம் இருக்கும் இயல்புணர்ச்சியை தூண்டுவது தான். அதற்காகத்தான் நான் எப்போதும் படப்பிடிப்பு தளத்தை அமைதியாக வைத்திருப்பேன். அதனால் தான் நான் யாரையும் அறிமுகப்படுத்தினேன் என ஒருபோதும் நினைப்பதில்லை. ஏகனுக்கு ஒரு ஒளிமயமான எதிர்காலம் இருக்கிறது. இதற்கு முக்கியமான காரணம் அவருடைய தந்தை என்றாலும் ஏகன் நன்றாக வளர வேண்டும் என அவருடைய தாயாரும் தொடர்ந்து பிரார்த்தனை செய்து கொண்டிருக்கிறார்.
தயாரிப்பாளர் மேத்யூ நான் வியந்து பார்த்த இளைஞன். இந்த இளம் வயதிலேயே பொறுப்புணர்ச்சியுடன், கடமையுணர்ச்சியுடன் பணியாற்றுகிறார். இவருக்கும் இவருடைய தந்தை சிறந்த முன்னுதாரணமாக இருக்கிறார்.
மேலும் இந்த திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்கள் நடிகைகள் தொழில்நுட்ப கலைஞர்கள் என அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படம் ஒரு முக்கியமான விஷயத்தை பேசி இருக்கிறது. வாழ்க்கை என்னை கைவிட்டு விட்டது, இந்த வாழ்க்கையை வாழவே பிடிக்கவில்லை, இந்த வாழ்க்கையில் எனக்கென்று யாரும் இல்லை என்று யாராவது நினைத்தால் அவர்களுக்கு இந்த படத்தில் ஒரு செய்தி இருக்கிறது. இந்த பிரபஞ்சம் எந்த ஒரு தனி மனிதனையும் கைவிடுவதில்லை. ஏதேனும் ஒரு ரூபத்தில் வருகை தந்து உங்களை அரவணைத்து காக்கும்.
யோகி பாபு கதையை கேட்காமல் என்னை நம்பி வந்து இந்த திரைப்படத்தில் ஏகனின் பெரியப்பாவாக பெரியசாமி எனும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். ஏகன்-யோகி பாபு கூட்டணியில் படத்தில் இடம் பெறும் காட்சி ஒன்று இருக்கிறது. உணர்வுபூர்வமாகவும், மௌனமாகவும் இருக்கும் இந்த காட்சியில் ஏகன் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவரும். இந்த காட்சியில் ஏகனின் நடிப்பை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைவார்கள். அந்த வகையில் ஏகனுக்கு தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் காத்திருக்கிறது.
இந்தத் திரைப்படம் எதிர்வரும் 18ம் தேதி அன்று அமெரிக்காவில் உள்ள ஆக்லாந்து சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.
இந்த விழாவிற்கு வருகை தந்து சிறப்பு சேர்த்த ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதிக்கு என்னுடைய நன்றி.
மேலும் இந்த திரைப்படத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் மகளிருக்கு வழங்கிய இலவச பேருந்து பயண சலுகைகள், அரசு மருத்துவமனைகளின் பலன்கள் குறித்து காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. இந்தப் படம் ரசிகர்களை நிச்சயம் ஏமாற்றாது.
இந்தத் திரைப்படம் உள்ளூர் மக்களையும் ரசிக்க வைக்கிறது. உலக மக்களிடமும் சென்றடையும். ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ உள்ளூர் மக்களுக்கும் மட்டுமல்லாமல் உலக மக்களுக்கும் பிடித்த செல்லதுரையாகவும் இருக்கும்,” என்றார்.