ஆரகன் – திரைவிமர்சனம்

‘ஆரகன்’’ ஒரு திகில் சம்பவம்

கதை…

நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்..

நாயகி திருமணம் செய்து கொள்ளலாம் என்று நாயகனை வற்புறுத்த, தன்னிடம்  6 லட்சம் பணம் இருக்கிறது என்றும், மேற்கொண்டு 4 லட்சம் பணம் சேர்த்தவுடன் ஏதாவது பிசினஸ் ஆரம்பிக்கலாம், அதன் பிறகு கல்யாணம் செய்து கொண்டால் வசதியாக வாழலாம் என்றும், இப்போது வரும் சம்பளம் குடும்பத்தை நடத்த போதாது என்று நாயகன் கூற நாயகியும்… நாயகனுக்கு உதவும் பொருட்டு பணம் சேர்க்க முற்படுகின்றார்.

அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. அதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் நாயகனுக்கு தேவையான 4 லட்சம் கிடைக்கும் என்பதால், அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி.

“ஒரு சாதாரண வேலைக்கு மாதம் 70,000 சம்பளமா?” என்று முதலில் மறுக்கும் நாயகன், பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்..

செல்போன் டவர் கிடைக்காத, ஆள்நடமாட்டம் இல்லாத அடர்ந்த வனப்பகுதிக்குள் இருக்கும் அந்த ஸ்ரீரஞ்சனியின் வீடு மர்மமாக இருக்க, அந்த வீட்டில் இருக்கும் பொருட்களும் மர்மம் நிறைந்தவைகளாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல், முகம் பார்க்கும் கண்ணாடி வைத்துக் கொள்வது எங்கள் குடும்பத்திற்கு ஆகாது என்பதால் நாங்கள் அதை பயன்படுத்த மாட்டோம் என்று ஸ்ரீரஞ்சனி சொல்கிறார்.

கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான தோற்றம் வருகிறது.. இவை எல்லாம் எதனால் நடைபெறுகிறது.. என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

ஏற்கனவே இது போன்று சில படங்கள் வந்திருந்தாலும், புராண கால கதையுடன் இணைத்து, பல திருப்பங்களுடன் சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்து, ஒரு திகில் படத்தை தந்திருக்கிறார் இயக்குனர் அருண்.

மொத்தத்தில் ‘‘ஆரகன்’’ ஒரு திகில் சம்பவம்

Leave A Reply

Your email address will not be published.